தி மு க மீண்டும் ஆட்சி வரக்கூடாது என நடிகை பேச்சு

தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவே கூடாது" - அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் நடிகை பேச்சு
ஆத்தூர்: "தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவே கூடாது. தேர்தல் நேரத்தில் மறந்துவிடாதீர்கள்," என அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொள்கை பரப்பு துணை செயலர் கவுதமி பேசினார்.
அமைச்சர் பொன்முடி, பெண்கள், சைவ, வைணவத்தை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சேலம் மாவட்டம் ஆத்தூர், ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா தலைமை வகித்தார்.
புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், "அமைச்சர் பொன்முடி, எம்.பி., கல்யாணசுந்தரம், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர், சமீபத்தில் பெண்கள் குறித்தும், ஹிந்து மத நம்பிக்கை குறித்தும் இழிவுபடுத்தி பேசியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை," என்றார்.
தொடர்ந்து கொள்கை பரப்பு துணை செயலரான நடிகை கவுதமி பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருந்திருந்தால், பொன்முடியை எப்போதோ நீக்கி இருப்பார். பொன்முடி பேச்சுக்குப் பின், அவரை தூக்கி எறிந்திருக்க வேண்டாமா? உங்களை ஆட்சியில் அமர வைத்த மக்களை, இப்படியா இழிவாக பேசுவது? தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவே கூடாது. தேர்தல் நேரத்தில் மறந்துவிடாதீர்கள். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டுமெனில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'நீங்கள் செய்வீர்களா...' என, பெண்களிடம் கவுதமி கேட்டார். மேலும் பொன்முடியை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி, அ.தி.மு.க., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்தூர் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா, நகர செயலர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu