இதமான சீதோஷ்ண நிலையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் அருவியை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொடைக்கானல். இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் குளுமையான கால நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி போன்ற அருவிகளை கண்டு ரசித்து அருகில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu