குற்றாலத்தில் குளிக்க அனுமதி: ஆட்டோ ஒட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக, ஆட்டோ ஒட்டுனர் சங்கம், உணவு விடுதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக, ஆட்டோ ஒட்டுனர் சங்கம், உணவு விடுதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளின் நகரமான குற்றாலம் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த குற்றாலம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்காமல் உள்ளது. இந்த குற்றாலத்தை நம்பி சுமார் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக குற்றாலம் திறக்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனே குற்றாலத்தை திறக்க வலியுறுத்தியும் குற்றாலம் சுற்றுலா பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பாஜக, ஆட்டோ ஓட்டுனர்கள், உணவு விடுதி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தில் ஒகேனக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள அருவிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்டை மாநிலத்திலும் அனைத்து அருவிகளும் திறக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக தலையிட்டு குற்றால அருவிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் தடையை மீறி குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu