செவ்வாய்கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு

செவ்வாய்கிரகம்
செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோள். இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளது. இதனால் இக்கோளை செந்நிறமாகக் காட்டுகிறது. பூமியில் உள்ளதுபோல் துருவானது செவ்வாயில் அதிக அளவில் உள்ளது இதன் காரணமாகவும் செவ்வாய் பார்க்க சிவப்பு நிறத்தில் தெரியும். இதனாலேயே இந்த கிரகத்திற்கு செவ்வாய் என்ற பெயர் வந்தது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் பூமியை போன்றே இருக்கும்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா? என்று உலகநாடுகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளன. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் நீண்ட கருமையான கீரல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விஞ்ஞானிகள் விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. செவ்வாய் கிரகம் மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்ட கிரகங்களில் ஒன்றாகும்,
இந்த நிலையில்தான் தற்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் புதியசெயதிகள் வெளியாகி இருக்கின்றன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என அறிவித்தது. ஆனால் அதை அந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் நம்பவில்லை.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான உலகநாடுகளின் விஞ்ஞானிகள் அடங்கிய குழு செவ்வாயில் பனிப்படலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தது. அதில்தான் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று கண்டறிந்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் அர்னால்டு கூறும்போது "புதிய நிலப்பரப்பு சான்றுகள், எங்களது கம்ப்யூட்டர் ஆய்வு மாதிரி முடிவுகள், ரேடார் தரவுகள் ஆகியவை, இப்போது செவ்வாய் கிரகத்தில் குறைந்தபட்சம் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரமாக உள்ளது" என்றார்.
ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் தெரிவிக்கையில் , "இந்த ஆய்வு செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த குறிப்பை இப்போது அளிக்கிறது " என தெரிவித்தார். மேலும் " தண்ணீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இருந்தாலும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொண்டு விட முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் செவ்வாய்கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? உ யிரினங்கள் வாழமுடியுமா? என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu