வங்கி கிளையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டத்தில் வங்கியின் நடவடிக்கையை கண்டித்து நியாயம் கேட்டு சங்கரண்டாம்பாளையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியம் சங்கராண்டாம்பாளையம் கனரா வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயியின் நகை கடனுக்கு வட்டி செலுத்தவோ முழு தொகை கட்டி நகையை மீட்கவோ அனுமதிக்காமல் நகையை ஜனவரி 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஏலம் விட அறிவிப்பு செய்த கனரா வங்கி மேலாளரின் நடவடிக்கையை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடன் 100க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், சங்கரண்டாம்பாளையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பொன்னுச்சாமி என்ற விவசாயி தனது சொத்து பத்திரத்தை வைத்து வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதே வங்கியில் பொன்னுச்சாமியின் மகன் நல்லுசாமி நகையை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
விவசாயியின் தந்தை வாங்கிய பயிர் கடனை செலுத்தினால் மட்டுமே மகன் நல்லுசாமி வாங்கிய நகைகடன் வட்டி அல்லது அசல் வாங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் நகையை ஏலம் விடப்படும் என நெருக்கடி கொடுத்ததாக வங்கியின் மேலாளரை பற்றி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோரிடம் புகார் அளித்து ஆட்சியர் உத்தரவிட்டும் கூட ஏற்காமல் உள்ள வங்கி மேலாளரை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம், மற்றும் ஊதியூர் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், விவசாய கடன் வேறு, நகை கடன் வேறு, ஆகையால் நல்லுசாமி வாங்கிய நகைகடனை வட்டி, அசல் பெற்றுக்கொண்டு திருப்பி தர வேண்டுமென பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. உடனடியாக வட்டி, அசலை பெற்றுக்கொண்டு நகையை திருப்பி தராவிட்டால் வரும் நாட்களில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu