கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய திமுக

கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய திமுக
X

வாணியம்பாடியில் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் பொக்லைன் இயந்திரத்தையும் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் பாலாற்றில் கிளையாறு செல்கிறது. இதில் கழிவுநீர் அதிகம் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு கனிமவளம் சுரங்கதுறை மூலம் கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் பெற்றார். இந்த நிதியின் மூலம் ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதி வரை 660 மீட்டர் நீளத்திற்கு 1.5 மீட்டர் அகலத்தில் குடியிருப்பு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

இத்தகவலை அறிந்த வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பணி நடக்கும் இடத்திற்கு வந்து இப்பணியை செய்ய கூடாது எனவும் இந்த கால்வாய் அமைக்கும் திட்டப்பணி குறித்து வரைபடத்தை காண்பித்தால் மட்டுமே பணி செய்ய விடுவோம் என கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு தோண்டிய கால்வாய் பள்ளங்கள் மூடப்பட்டது. இது குறித்து உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து மீண்டும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!