ஓடும் பேருந்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்
X

திருச்சியில் ஓடும் பேருந்தில் அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் ,ஸ்ரீரங்கம், கீழ அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். திருச்சியில் அரசுப்பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த இவர், முதல் டிரிப் முடிந்து சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், இரவு 9 மணிக்கு திருச்சியிலிருந்து சிவகங்கைக்கு செல்லும் பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனையடுத்து, கிராப்பட்டி அருகேயுள்ள ராமச்சந்திரநகர் டெப்போவிலிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்ற பேருந்தில் ஆறுமுகம் புறப்பட்டார். அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை செல்ல வேண்டும். பேருந்தை ஓட்டுநர் துளசிதாசன் ஓட்டிச் சென்றார்.

பேருந்து கிராப்பட்டியை கடந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறுமுகம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துள்ளார். செய்வதறியாத திகைத்த, ஓட்டுநர் துளசிதாசன் உடனடியாக பேருந்தை நிறுத்தி முதலுதவி செய்துள்ளார். ஆனால் வலி அதிகமாவதாக ஆறுமுகம் கூறியதை அடுத்து பேருந்தை எடுத்துக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று அவசர சிகிச்சை பிரிவுக்கு ஆறுமுகத்தை கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சக பணியாளர்கள், போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியின்போது பேருந்து நடத்துனர் இறந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!