திருச்சி என்.ஐ.டி. விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்பு

திருச்சி என்.ஐ.டி.யில் விரிவாக்க தள கட்டிடத்தை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விரிவுரை கூட்டரங்கின் இரண்டாவது தளத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய கல்வித்துறை, திறன் மேம்பாடு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு திறந்து தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக மேலும் அவர் உற்பத்திப் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் ஆகிய துறைகளின் இணைப்புக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையிலும் கலந்து கொண்டார்.
விரிவுரைக் கூட்டரங்கின் மேல்தள விரிவாக்கமானது ரூ. 14 கோடி மதிப்பிலும் இணைப்புக் கட்டிடங்கள் ரூ. 64 கோடி மதிப்பிலும் ஆனவையாகும்.
இவ்விரு விழாக்களிலும் தேசிய தொழில் நுட்பக் கழக நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் தலைமை வகிக்க, இயக்குனர் முனைவர் அகிலா முன்னிலை வகித்தார்.
விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் எண்ணற்ற சாதனைகளையும், புதிய கல்விக் கொள்கையின் சிறப்பையும் அதனை நிறைவேற்றுவதில் நிறுவனத்தின் அற்பணிப்பையும் மேற்கோள் காட்டினார்.
மேலும் அவர், சரியான பின்புலமற்ற ஆனால் திறன்மிகு மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப் படும் திறன் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கும் இக்நைட் குழுவின் சீரிய பணிகளைப் பாராட்டினார்.
திருச்சி என்.ஐ.டி.இயக்குனர் அகிலா பேசுகையில், மாணவர்களின் தகுதி மற்றும் பண்புகளை உருவாக்குவதில் நிறுவனத்தின் பங்கையும், LOGOS எனும் கிரேக்கத்தில் இருந்து உருவான வார்த்தையின் தொடர்பினையும் எடுத்துக்காட்டினார்.
மேலும் அவர், அமைச்சகத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவனத்தின் வைரவிழா ஆண்டில் ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கும் திட்டத்தினையும், அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் நீண்ட கால நேர்மறை தாக்கம் பற்றியும் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu