திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை .
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மார்கழிமாத சீர்வரிசை நேற்று இரவு வழங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டு துவக்கத்தில் நின்று போன இவ்வழக்கத்திற்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு நேற்று இரவு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இதே போல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.
இதையடுத்து மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பாளர் பழனிசாமி, அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.
திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பண்டிதர்கள், அகிலாண்டேஸ்வரி சன்னதி கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu