எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 மீனவர்கள் கைது

இலங்கை கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தை சேர்ந்த அஸ்வத் புருக்கானுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில், நாகை மாவட்டம் காடம்பாடியை சேர்ந்த முருகையன் மகன் சக்திவேல் (30), நாகை மாவட்டம் பனங்குடியை சேர்ந்த ராஜா மகன் பாலமுருகன்(32), நாகூரை சேர்ந்த மணிபாலன்(32), ஆகிய மூவரும், தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5ம் தேதி மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 6ம் தேதி மாலை அவர்கள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வரவில்லை.இதற்கிடையில், நேற்றுமுன்தினம் மாலை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடலோர காவல் படையினரால், யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தொண்டைமனாறு கடற்பரப்பில், மூவரையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக, கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொது செயலாளர் தாஜூதீன் கூறியதாவது; தற்போது பிடிபட்ட படகையும், மீனவர்களையும் மன்னித்து விடுவிக்க வேண்டும். இதை போல, இலங்கை அரசால் ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டுள்ள 129 படகுகளையும், மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இருநாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில், எல்லை பிரச்சனை இன்றி கடலில் மீன்பிடிக்க இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர காவலர்களாக மீனவர்கள் செயல்படும் நிலையில், மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மீனவர்களுக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு