பெட்ரோல் போடுவதில் தகராறு கூலித்தாெழிலாளியை எரித்த இளைஞர்கள் கைது

பெட்ரோல் போடுவதில் தகராறு கூலித்தாெழிலாளியை எரித்த இளைஞர்கள் கைது
X

பெட்ரோல் பங்கில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறால், கூலித் தொழிலாளியை அடித்து, தீ வைத்து எரித்து கொலை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் கம்மாளத் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஸ்ரீதர் (38). இவர் நேற்று முன்தினம் கும்பகோணம் இ.பி.காலனி பகுதியில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். தலையில் ரத்தக் காயமும் இருந்தது. எனவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னால் இரு இளைஞர்கள் தங்களுடைய இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து, ஸ்ரீதர் சீக்கிரமாக பெட்ரோல் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள் என கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் குடிபோதையில் இருந்த இரு இளைஞர்களும் ஸ்ரீதரிடம் வாக்குவாதம் செய்து, அவரை அடித்துள்ளனர். அப்போது ஸ்ரீதர் வலி பொறுக்க முடியாமல் தன்னுடைய வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு இ.பி. காலனிக்கு ஓடியுள்ளார். அவரை பின் தொடர்ந்து துரத்தி, கல்லால் தாக்கியதில் நிலைகுலைந்து குப்புற விழுந்ததும் கல்லை தலையில் போட்டும், கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் ஸ்ரீதரை தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானதை தொடர்ந்து போலீஸார் விசாரித்த போது, ஸ்ரீதரை தாக்கி கொலை செய்ததாக தாராசுரம் சந்தோஷ்(23), அஜித் (23) என தெரியவந்தது. இதில் சந்தோஷ் கொத்தனார் வேலை செய்ததும், அஜித் பித்தளை பட்டறையில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இருவரும் குடிபோதையில் இருந்தபோது, ஸ்ரீதர் பெட்ரோல் பங்கில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரை தாக்கி கொலை செய்ததாக தெரிவித்தனர்.இருவரையும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகேசன் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி