தேங்கிய மழைநீரில் நாற்று நட்ட பொதுமக்கள்
பாவூர்சத்திரம் அருகே தேங்கிய மழைநீரை அகற்றாததால் அதில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தில் சுமார் 800க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ராஜா நகர் தெரு பகுதியில் மட்டும் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தெருவில் சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை பள்ளமாக காணப்பட்டதால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் சார்பாக கீழப்பாவூர் யூனியன் அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தை மூடுகின்றோம் என்ற பெயரில் சகதி மணல்களை தெரு முழுவதும் பரப்பியுள்ளனர்.
தற்போது தென்காசி மாவட்டத்தில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராஜா நகர் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கியும் சகதியுமாக மழைநீர் வடிவதற்கு வாறுகால் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் நடப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். ராஜா நகர் பகுதி மக்கள் யூனியன் அலுவலர்களுக்கு தெருவின் நிலை சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு மனு அளித்துள்ளனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். இதற்கு ஒரு தீர்வாக 50 குடியிருப்பு மக்களும் ராஜா நகர் தெருவில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். அதுமட்டுமில்லாமல் ராஜா நகர் தெருவில் நடுப்பகுதியில் மின் கம்பம் ஒன்றும் நடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பெரிய வாகனங்கள் தெருவிற்கு செல்ல முடியாமல் உள்ளது.
அரசு அதிகாரிகள் உடனடியாக இச்சாலையை சிமெண்ட் சாலையாக சீரமைத்து தகுந்த கழிவு நீரோடை வசதி அமைத்தும் தெருவின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக நடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu