மராமத்து செய்த கண்மாயில் உடைப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வல்லத்திராகோட்டை பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்ட கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வல்லத்திராகோட்டை , மணியம்பள்ளம், வாண்டாகோட்டை, வல்லத்திராகோட்டை உள்ளிட்ட 5 ஊராட்சிக்கு உட்பட்ட வல்லநாடு கண்மாய் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டதோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய கண்மாயாக கருதப்படுகிறது. இந்த கண்மாயை நம்பி சுமார் 5000 ஏக்கர் விவசாயம் நடைபெறுவதோடு பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதிய மழை இல்லாததால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கண்மாய் தூர்வாரப்படாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 63 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் வல்லநாடு கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது.
ஆனால் குடிமராமத்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபெற்ற பணிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் நேற்று இரவு அந்த கண்மாயில் உள்ள 12 மதகுகளில் கிழக்கு புறம் உள்ள சிறுமடை மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இன்று அதிகாலை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து விட்டு உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அங்கு வந்த மணியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை அடைத்தனர். எனினும் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட மதகில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதிகாலையிலேயே தகவல் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் யாரும் அங்கு வந்து பார்வையிடவில்லை என்றும் குடிமராமத்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் தான் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த உடைப்பை உடனடியாக சரி செய்யாவிட்டால் உடைப்பு பெரிதாகி ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்றும் அதுமட்டுமின்றி தற்போது தான் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அணையில் பெரிய உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் முழுவதும் வெளியேறி பயிர்கள் அனைத்தும் நாசமாகிவிடும் என்றனர். மேலும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்வதோடு குடிமராமத்து பணியை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu