மாநில விதை சான்றளிப்பு துறை இணை இயக்குர் நாமக்கல் மாவட்டத்தில் நேரடி ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, நிலக்கடலை விதைப்பண்ணையை, மாநில இணை இயக்குனர் தபேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தார். மாவட்டத்தில், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயி நடேசன் என்பவரது வயலில் அமைத்துள்ள 3 ஏக்கர் நிலக்கடலை விதைப்பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதில் விதைப்பண்ணைகளின் பங்கு, வயல் தரங்களை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
கொல்லிமலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ, நஞ்சில்லா உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்ய உயிர்மப் பண்ணையம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு வலியுறுத்தினார். நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விதைப்பண்ணை பதிவு, சான்று விதை உற்பத்தி இலக்கு சாதனை அடைந்தததைப் பாராட்டினார்.
விதைப்பரிசோதனை நிலையத்தில் நிலக்கடலை, எள், துவரை, உளுந்து, நெல் மற்றும் ஆமணக்கு பயிர்களில் ரகம் வாரியாக பயிர்களின் சிறப்பு இயல்புகள் குறித்தும், ரகங்களின் தனித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆண்டு இலக்கினை இம்மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது நாமக்கல் விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி, தருமபுரி விதைப்பரிசோதனை அலுவலர் கிரிஜா, கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, வேளளாண்மை விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ரஞ்சிதா மற்றும் விதைப் பரிசோதனை நிலைய அலுவலர்கள் தேவிப்பிரியா, சரண்யா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu