காஞ்சிபுரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை: கலெக்டர் துவக்கம்
காஞ்சிபுரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் கோஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி விற்பனையை குத்து விளக்கி ஏற்றி துவக்கி வைத்தார் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்.
காஞ்சிபுரம் காமாட்சி கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.
கோ ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனை மற்றும் தேவைகளை அறிந்து கைத்தறி ரகங்களை உருவாக்க நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து 2022-2023ம் ஆண்டில் சுமார் ரூ. 16.91 கோடி அளவிற்கு சில்லரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லெனான் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் போர்வைகள், போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியன விற்பனைக்கு உள்ளன.
தற்போது வேலூர் மண்டலத்திற்கு கீழ் உள்ள 12 விற்பனை நிலையங்களில் தீபாவளி 2023 பண்டிகை விற்பனை இலக்காக ரூ.1.5 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மண்டலத்தில் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை கடந்த ஆண்டு ரூ.7.07 கோடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு ரூ.14 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் காமாட்சி கோ ஆப்டெக்ஸ் இந்தாண்டு ரூ. 1.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பெருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2023 சிறப்பு விற்பனை அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. தூய பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ.8000 முதல் ரூ.40000 வரையில் பல வண்ணங்களில் சங்க விலைக்கே வழங்கப்படுகிறது.
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.
பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
துவக்க விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.