சென்னிமலை முருகன் கோவில் தேர் வடம் பிடித்தல் ரத்து
சென்னிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான தைப்பூச தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் 2021 ம் ஆண்டிற்கான தைப்பூச தேர்திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஆர்.டி.ஓ சைபுதீன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி , பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டுகவுண்டர்கள் மற்றும் அனைத்து மட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னிமலை கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு 14 நாட்கள் சாமி அலங்காரம்,திருவீதி உலா காட்சிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் மண்டபக்கட்டளைகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் நிரவாகம் சார்பில் மட்டுமே நடைபெறும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முருகனின் திருவீதி உலா காட்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலுக்கு காவடி , அலகு குத்தி வருபவர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் வரும் 28ம் தேதி தைப்பூச நாள் மற்றும் 1ம் தேதி மகா தரிசன நாள் ஆகிய இரு நாட்களில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார் எனவும் அரசு உத்தரவின்படி பக்தர்கள் தேங்காய் ,பழம்,பூ, மாலை போன்ற பூஜை பொருட்கள் எதுவும் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.28,29ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை ,தற்காலிக கடைகளுக்கு தடை, ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்கு பொருட்காட்சிகள் அமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால் பாதுகாப்பு நலன் கருதி இ பாஸ் முறை கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu