ரத்தம் விற்பனைக்கானது அல்ல: தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டிப்பு

மருத்துவமனைகள், ரத்த வங்கி மையங்களில் வழங்கப்படும் ரத்தத்துக்குச் சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என இந்திய மருத்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு, ரத்த நன்கொடையாளா்கள் யாரும் இல்லாத நிலையில், ரத்த வங்கிகளில் பெறப்படும் ரத்தத்துக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு யூனிட் ரத்தத்துக்கு ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை வசூலிக்கப்படுகிறது.
சில அரிதான ரத்தப் பிரிவுகள் அல்லது ரத்தத்துக்குப் பற்றாக்குறை ஏற்படும் சூழலில், அதற்கான கட்டணம் மிகவும் அதிமாக இருக்கும். இந்நிலையில், ரத்தம் விற்பனைக்குரியது அல்ல என்பதை கருத்தில் கொண்டு, அதற்குச் சேவைக் கட்டணம் மட்டும் பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்.26-இல் நடைபெற்ற இந்திய மருத்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருத்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கடந்த டிச. 26-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் டிசிஜிஐ, ‘ரத்தம் விற்பனைக்கானது அல்ல. ரத்த வங்கி மையங்களில் பெறப்படும் ரத்தத்துக்கு விநியோகம் மற்றும் சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, ரத்தம் மற்றும் பிற ரத்தக் கூறுகளுக்கு ரூ.250 முதல் ரூ.1,550 வரை சேவைக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அனைத்து ரத்த வங்கி மையங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu