கோவை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி

கோவை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 27). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.
கடந்த 14-ந் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் கரவழிமாதப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவரது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது என கூறினார். இதனை அவர்கள் உண்மை என நம்பினர். பின்னர் பாலசுப்பிரமணியம் சிறுமியை தனது வீட்டில் வைத்து 5 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே பாலசுப்பிரமணியம் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து 5 நாட்களாக சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 5 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu