ராயபுரம் அண்ணா பூங்காவில் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள்

ராயபுரம் அண்ணா பூங்காவில் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகளை சென்னை மேயர் பிரியா ராஜன் நேரில் ஆய்வு செய்தார்
சென்னை, ராயபுரம் தொகுதிக்கு உள்பட்ட அண்ணா பூங்காவில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை அண்ணா பூங்காவில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா பூங்கா ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை மேயர் கேட்டறிந்தார்.
அப்போது போதிய அளவில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இறகுப் பந்து மைதானத்தை விரிவு படுத்த வேண்டும். பெண்களுக்கென தனியாக உடற்பயிற்சி கூடம் அமைத்து தரவேண்டும். சமூக விரோதிகளின் அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில் காவலர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மேயரிடம் தெரிவித்தனர். பின்னர் பூங்காவில் வைக்கப்படிருந்த ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் படத்திற்கு மேயர் பிரியா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சூரிய நாராயணா தெரு அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் சமையல் கூடத்தை பார்வையிட்டனர். அப்போது சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை இருவரும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா? எனக் கேட்டறிந்த மேயர் வார்டு அலுவலகங்களில் பணியாளர்கள், அலுவலர்களின் வருகைப் பதிவினை ஆய்வு செய்தார். அரத்தூண் தெருவில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு, கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.
ராயபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஏதும் இல்லை. தமிழக அரசு அறிவித்து வரும் பல்வேறு சலுகைகள் காரணமாக இப்பகுதியில் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இத்தொகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடங்களை கட்டுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் பிரியாவிடம் சட்டப் பேரவை உறுப்பினர் மூர்த்தி கோரிக்கை மனு அளித்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா அவரிடம் உறுதி அளித்தார்.
ஆய்வின்போது திமுக மாவட்ட செயலாளர், நிலைக்குழு தலைவர் தா.இளைய அருணா, வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (கல்வி) சினேகா, ராயபுரம் மண்டல அலுவலர், தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu