உலக செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழுமம் அளித்த ஸ்பான்சர்

உலக செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழுமம் அளித்த ஸ்பான்சர்

பிரக்ஞானந்தாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதானி குழும தலைவர் கெளதம் அதானி.

உலக செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழும தலைவர் கௌதம் அதானி ஸ்பான்சர் அளித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான கௌதம் அதானி, இந்தியாவின் வளர்ந்து வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார். அதானி குழுமம், பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்ய உள்ளது.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, 2018 ஆம் ஆண்டில் தனது 12 வயதில், இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் ஆனார். 2022 ஆம் ஆண்டில், ஆன்லைன் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருக்குப் பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார். உலக சாம்பியனை வீழ்த்திய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

18 வயதில், பிரக்ஞானந்தா கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய செஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்செனுக்கு சவால் அளித்து ரன்னர் ஆனார் பிரக்ஞானந்தா.

இந்நிலையில், அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபருமான கௌதம் அதானி இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்தார். அகமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் அதானி குழுமம், பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதையொட்டி, அதானி குழும தலைவர் அதானி இன்று பிரக்ஞானந்தாவைச் சந்தித்தார். மேலும், "திறமை மிக்க பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட உயர்ந்த மட்டங்களில் விருதுகளை வெல்வதை விட உன்னதமானது எதுவுமில்லை. மேலும் நமது நாடு உலக அரங்கில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் அதானி குழுமம் ஆர்வமாக உள்ளது" என்று கௌதம் அதானி கூறியுள்ளார்.

பிரக்ஞானந்தா, தனக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்த அதானி குழுமத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். "நான் விளையாடும் போதெல்லாம், தேசத்திற்கு அதிக விருதுகளை வெல்வதே எனது ஒரே நோக்கம். எனது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள அதானி குழுமத்திற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார். செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைச் சந்தித்தது குறித்து கௌதம் அதானி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரக்ஞானந்தா செஸ் உலகில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தும் நிலையில் அவருக்கு ஆதரவளிப்பது ஒரு பெருமை. நமது தேசத்தின் மகத்துவத்தைக் கொண்டாட மேடையில் நிற்பதைவிட, திருப்திகரமானது எதுவுமில்லை என எண்ணற்ற இளம் இந்தியர்கள் நம்புவதற்கு பிரக்ஞானந்தாவின் வெற்றி உத்வேகம் அளிக்கிறது. பிரக்ஞானந்தா, இந்தியாவால் என்ன செய்ய முடியும், என்னவாக இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழும தலைவர் கெளதம் அதானி ஸ்பான்சர் அளித்து இருப்பது பிரக்ஞானந்தா சதுரங்க உலகில் மேலும் பல சாதனைகளை படைப்பதற்கு படிக்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story