உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா நேற்று மீண்டும் சரித்திரம் படைத்தார், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிச்சுற்று நடந்தது. இறுதி களத்தில் 12 பேரில் 3 இந்தியர்கள் இருந்ததால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் கண்டு ரசித்தனர்.
எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார். இரண்டாவது முயற்சியில் 88.17 மீ, மூன்றாவது 86.33 மீ மற்றும் நான்காவது 84.64 மீ. வீசினார்
அவருக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்ற இந்தியர்களான கிஷோர் குமார் (84.77 மீட்டர்), டி.பி.மனு (84.14 மீ) முறையே 5 மற்றும் 6-வது இடங்களைப் பிடித்தனர்.
நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கமாக அமைந்தது. இதற்கு முன்பு நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கமும், 2003-ம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இருந்தனர். உலக தடகளத்தில் தங்கமகனாக உருவெடுத்த ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈட்டி எறிதலில் திறமை வாய்ந்த நீரஜ் சோப்ரா தனிச்சிறப்பான நிலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
அவருடைய அர்ப்பணிப்பு, துல்லிய தன்மை மற்றும் பேரார்வம் ஆகியவை, அவரை தடகள போட்டியில் ஒரு சாம்பியனாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் ஈடு இணையற்ற திறமைக்கான ஓர் அடையாளம் ஆகவும் திகழ செய்கின்றன. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu