டி-20 உலக்கோப்பையை வெல்லப்போது யார்? இங்கிலாந்து- பாகிஸ்தான் பலப்பரீட்சை..

டி-20 உலக்கோப்பையை வெல்லப்போது யார்? இங்கிலாந்து- பாகிஸ்தான் பலப்பரீட்சை..
X
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர் போட்டிக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற அந்தப் போட்டித் தொடரில் உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 16 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று முடிவில் வெஸ்ட் இன்டீஸ், யுஏஇ, நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 சுற்று முடிவில், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் வெளியேறின.

சூப்பர் 12 சுற்று முடிவடைந்த நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து அணியும், குரூப்- 2 பிரிவில் இடண்டாமிடம் பிடித்த பாகிஸ்தான் அணியும் மோதின. இதில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல, குரூப்-1 பிரிவில் இரண்டாமிடம் பிடித்த இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும் மோதிய அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய நேரப்படி நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

1992 ஆம் ஆண்டு திரும்புகிறதா?: கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

அந்தப் போட்டித் தொடரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதைப் போல, தற்போதும் நியூஸிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறி உள்ளது.

எனவே, இந்த முறை தங்களுக்குதான் உலகக் கோப்பை என பாகிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் 1992 ஆம் ஆண்டு மீண்டும் திரும்புகிறது என கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வலிமையான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக ஆடி வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்தை சந்தித்து. இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றதால் அந்த அணி வீரர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போது ஒருநாள் போட்டியின் உலக சாம்பியானாக திகழும் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையும் கைப்பெற்றும் முனைப்பில் உள்ளது.

வெல்லப்போவது யார்?:

சம பலம் கொண்ட இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. டாஸ் வெல்லும் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கிரிக்கெட் ரசிரக்களுக்கு இந்த இறுதிப் போட்டி விடுமுறை விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க வானிலையை பொறுத்தவரை இறுதிப் போட்டி நடைபெறுமா? என்ற சூழலே உருவாகி உள்ளது. மழையின் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெறாத நிலை ஏற்பட்டால் இரு அணிகளும் டி-20 உலகக் கோப்பை கோப்பையை பகிர்ந்து கொள்ளும் நிலை வரலாம்.

போட்டி நடைபெறும் நாளான நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்னில் 95 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 25 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். அன்றையதினம் போட்டி தொடங்கப்பட்டு இடையில் மழை குறுக்கிட்டால் மற்றொரு நாளில் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து போட்டி நடைபெறும். அன்றையதினம் போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,

அதுவும் சாத்தியமில்லை என்றால் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படும். நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 13.9 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6.6 கோடியும் வழங்கப்படு்ம என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil