ஐந்தாவது டி20 போட்டி: தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

ஐந்தாவது டி20 போட்டி: தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
X
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஒபெட் மெக்காய், ஒடியன் சுமித் நீக்கப்பட்டு அல்ஜாரி ஜோசப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் இறங்கினர். கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இருவரும் ஏமாற்றம் அளித்தனர். ஜெய்ஸ்வால் (5 ரன்) முதல் ஓவரிலேயே அகீல் ஹூசைன் சுழற்பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுப்மன் கில் (9 ரன்) விக்கெட்டையும் அகீல் வீழ்த்தினார். டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பிற்கு வெளியே செல்வது தெரிந்தது.சுப்மன் கில் டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்திருந்தால் அவுட்டில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால் அப்பீல் செய்யவில்லை,

இதைத்தொடர்ந்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ ஜோடி நிதானமாக ஆடியது. அல்ஜாரி ஜோசப் வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டிய திலக் வர்மா 27 ரன்னில் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். ரோஸ்டன் சேஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பொறுப்புடன் நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது அவர் அடித்த 15-வது அரைசதம் இதுவாகும். அவருடன் இணைந்த சஞ்சு சாம்சன் (13 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (14 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை.

நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 61 ரன்னில் (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் (8 ரன்), குல்தீப் யாதவ் (0), அக்ஷர் பட்டேல் (13 ரன்) ஆகியோர் சோபிக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹல் ரன் எதுவும் எடுக்காமலும், முகேஷ் குமார் 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி பேட்டிங் செய்த போது இரண்டு தடவை முறையே 10 மற்றும் 5 நிமிடங்கள் மழையால் ஆட்டம் தடைபட்டு தொடர்ந்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரொமாரியா ஷெப்பர்டு 4 விக்கெட்டும், அகீல் ஹூசைன், ஜாசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 10 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து நிகோலஸ் பூரன், தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் கிங்குடன் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர்.

12.3 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது பிரன்டன் கிங் 54 ரன்னுடனும், நிகோலஸ் பூரன் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் வானிலை சரியானதை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரன் 47 (35) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கிங்குடன், ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் அதிரடியில் மிரட்டிய பிராண்டன் கிங் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 85 (55) ரன்களும், ஷாய் ஹோப் 22 (13) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!