வாலிபால், பீச் வாலிபால் போட்டிகளில் தூத்துக்குடி துறைமுக அணி சாம்பியன்

வாலிபால், பீச் வாலிபால் போட்டிகளில் தூத்துக்குடி துறைமுக அணி சாம்பியன்
X

வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற தூத்துக்குடி வஉசி துறைமுக அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான வாலிபால் மற்றும் பீச் வாலிபால் போட்டிகளில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாம்பியன் பட்டம் பெற்றது.

நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களின் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகத்துடன் இணைந்து நடத்தபட்ட 44 ஆவது அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான வாலிபால் போட்டி மற்றும் 15 ஆவது அகில இந்திய பெருந்துறைமுகங்கிடையே நடைபெற்ற பீச் (கடற்கரை) வாலிபால் போட்டி தூத்துக்குடியில் நான்கு நாட்கள் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம், கொச்சின் (கடற்கரை கைபந்து), நீயூமங்களுர், கோவா மற்றும் மும்பை ஆகிய 9 பெருந்துறைமுக அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

பீச் வாலிபால் இறுதி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரை கைபந்து அணியை எதிர்த்து கொச்சின் கடற்கரை கைபந்து அணியினர் மோதினர். இந்தப் போட்டியில் 21-13, 21-13 என்ற புள்ளிகளுடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக பீச் வாலிபால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா துறைமுக கடற்கரை கைபந்து அணி விசாகப்பட்டினம் துறைமுக கடற்கரை கைபந்து அணியை எதிர் கொண்டது. இதில் 21-10, 21-15 என்ற புள்ளிகளை பெற்று கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக கடற்கரை கைபந்து அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற வாலிபால் இறுதி போட்டியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக அணியினரை எதிர்த்து சென்னை அணியினர் மோதினர். இந்தப் போட்டியில் 25-12, 25-19, 25-13 என்ற புள்ளிகளுடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணியினர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் பாரதீப் துறைமுக கைபந்து அணியும், கோவா துறைமுக கைபந்து அணியும் மோதிக் கொண்டன. இதில் 25-09, 25-14 என்ற புள்ளிகளை பெற்று பாரதீப் துறைமுக கைபந்து அணி வெற்றி பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல்குமார் ஜா கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினார். நிகழ்சியில், துறைமுக தலைமை இயந்திர பொறியாளரும், துறைமுக விளையாட்டு கழக தலைவருமான சுரேஷ் பாபு, மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!