தேசிய உயரம் தாண்டுதலில் சாதித்த தூத்துக்குடி மாணவி.. கனிமொழி எம்.பி. வாழ்த்து..
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சஹானாவுக்கு வரவேற்பு.
அசாம் மாநிலம், கௌகாத்தியில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், 37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சஹானா தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்ற வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மாணவி சஹானா 1.68 சென்டி மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும், ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான தேசிய போட்டியிலும் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனைப் படைத்துள்ள மாணவி சஹானாவின் தந்தை பாலகிருஷ்ணன் தூத்துக்குடி வஉசி துறைமுக அதிகார ஆணையக் குழு உறுப்பினராக உள்ளார். சஹானா தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் படித்து வருகிறார். வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவி சஹானாவுக்கு திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில், அசாமில் நடைபெற்ற 37 ஆவது தேசிய தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சஹானாவுக்கு வாழ்த்துகள். தொடர் முயற்சிகளால் சாதனை தடம் பதித்து வரும் மாணவி சஹானாவுக்கு இன்னும் பல வெற்றிகள் சேரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெண்கலப் பதக்கம் வென்று இன்று தூத்துக்குடி திரும்பிய மாணவி சஹானாவுக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வைத்து மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், யானை மூலம் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தடகள சங்க பொருளாளர் அருள்சகாயம், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் அசோக், மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் சின்னத்தம்பி, மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் பாலா, சுங்கத்துறை அதிகாரி சரவணன், ஏஎஸ்என் லாஜிஸ்டிக் மேலாளர் ரகு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சஹானாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவி சஹானா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெற்றிபெற்றுளேன் இதற்கு, உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் சிந்தடிக் மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். தேசிய அளவில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை என சஹானா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu