டெஸ்ட் கிரிக்கெட்: 513 ரன் எடுத்தால் வெற்றி..! வங்கதேச அணிக்கு இந்திய அணி இமாலய இலக்கு நிர்ணயம்..!

டெஸ்ட் கிரிக்கெட்: 513 ரன் எடுத்தால் வெற்றி..! வங்கதேச அணிக்கு இந்திய அணி இமாலய இலக்கு நிர்ணயம்..!
X

சதம் அடித்த சுப்மன் கில்- புஜாரா.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில், புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களும் எடுத்தனர்.

மேலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 46 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் அணியின் பந்து வீச்சாளர் தாஜுல் இஸ்லாம் மற்றும் மெகிந்தி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹோசின் மற்றும் கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

150 ரன்களில் சுருண்ட வங்கதேசம்:

தொடர்ந்து களம் இறங்கிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. பாலோ-ஆனை தவிர்க்க மேலும் 72 ரன்கள் தேவை என்ற நிலையில். மூன்றாவது நாள் ஆட்டத்தை வங்கதேசம் அணி இன்று தொடங்கியது.

இருப்பினும், மேலும், 17 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸார் படேல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

புஜாரா- சுப்மன் கில் அபார சதம்:

வங்கதேசம் அணி பாலோ ஆன் ஆனபோதிலும், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல். ராகுலும், சுப்மன் கில்லும் இறங்கினர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கலீல் அகமது பந்துவீச்சில் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய புஜாராவும், சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். 110 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் மெகிந்தி ஹசன் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பிறகு வீரட் கோலி களம் இறங்கினார்.

புஜாரா 102 ரன்கள் எடுத்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது. அப்போது, வீரட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 61.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேசம் அணிக்கு இந்திய அணி நிர்ணயித்தது.

வங்கதேசம் நிதான ஆட்டம்:

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 42 ஆக இருந்தபோது மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சான்டோ 25 ரன்களும், ஜாஹிர் ஹசன் 17 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்.

இன்னும், இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil