“தேங்க்யூ எம்.எஸ்.தோனி சார்”: யோகிபாபு

“தேங்க்யூ எம்.எஸ்.தோனி சார்”:  யோகிபாபு
X

நடிகர் யோகி பாபு (பைல் படம்).

எம்.எஸ்.தோனி கையொப்பமிட்டு தனக்கு பரிசளித்த கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டு, “தேங்க்யூ எம்.எஸ்.தோனி சார்” என்று நடிகர் யோகிபாபு வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யோகி பாபு. அதன் பின்னர் தனது நடிப்புத் திறமை, தனித்துவ தோற்றம், ஒவ்வொரு டயலாக்கிற்கும் உடனடியாக கவுன்டர் கொடுக்கும் அவரது இயல்பு ஆகியவற்றின் காரணமாக வெள்ளித் திரையிலும் வெற்றிகரமாக முத்திரை பதித்துள்ளார்.

சினிமாவை தாண்டி கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகி பாபு, அநேக நேரங்களில் கிரிக்கெட் மட்டையுடனேயே வலம் வருகிறார். மேலும் அவர் அவ்வப்போது வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தயாரிப்பின் முதல் திரைப்படமான “லெட்ஸ் கெட் மேரிட் “ என்ற திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார் என போஸ்டர்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, அண்மையில் தோனி கையொப்பமிட்டுள்ள கிரிக்கெட் மட்டையை தனக்கு அவர் பரிசளித்ததாக, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் யோகி பாபு. அதில் ”வாழ்த்துக்கள் யோகி பாபு” என எழுதி தோனியின் கையெழுத்து இடம்பெற்றிருந்தது.

ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் இந்த வெற்றிக்குப் பின்னர் பேட்டியளித்த கேப்டன் எம்.எஸ்.தோனி, “நான் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற இது சரியான நேரம் தான். நான் இப்போதே நன்றி சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால் ரசிகர்கள் கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் பார்க்கும் போது எனக்கு இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும் என்பது போல உள்ளது. ஆனால் எனது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என மிகவும் உறுக்கமாக பேசினார்.

இந்நிலையில், இன்று யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி தனக்கு அளித்த கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டு, “தேங்க்யூ எம்.எஸ்.தோனி சார்” என்ற பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் வெற்றியை நடிகர் யோகி பாபு கொண்டாடும் விதமாக அமைந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!