முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு.. வங்கதேசம் திணறல்…

முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு.. வங்கதேசம் திணறல்…
X

வங்கதேச அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது.

வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்த நிலையில், இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அந்தப் இந்திய அணியின் இளம் வீரர் இசான் கிஸன் இரட்டைச் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.

முதல் டெஸ்ட் போட்டி:

இந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 90 ரன்கள் எடுத்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 46 ரன்கள் எடுத்தார். அக்ஸார் படேல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களுடன் ஆட்டம் இழங்காமல் இருந்தார். வங்கதேசம் அணியின் பந்து வீச்சாளர் தாஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெகிந்தி ஹாசன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டம்: இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 82 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மேலும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், அஸ்வினும், குல்தீப் யாதவும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

அஸ்வின் 58 ரன்களிலும், குல்தீப் யாதவ் 40 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முகமது சிராஜ் 4 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. உமேஷ் யாதவ் 15 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது.

வங்கதேசம் அணியின் பந்து வீச்சாளர் தாஜுல் இஸ்லாம் மற்றும் மெகிந்தி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹோசின் மற்றும் கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதைத்தொடர்ந்து வங்கதேசம் அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

வங்கதேசம் திணறல்:

வங்கதேசம் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் நஜ்மல் ஹோசின் ரன் ஏதும் எடுக்காமலும், யாசிர் அலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் அணி பேட்டர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் ஓரளவு தாக்குப்பிடித்த ஜாஹிர் ஹாசன் 20 ரன்னும், லிட்டன் தாஸ் 24 ரன்னும், முஜ்புர் ரஹிம் 28 ரன்னும் எடுத்தனர்.

வங்கதேசம் அணி பாலோ-ஆனை தவிர்க்க இன்னும் 72 ரன்கள் தேவை. 22 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய குல்தீப் யாதவ் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 40 ரன்களை குவித்தார்.

இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இன்னிங்ஸ் வித்திாயசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil