தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்: சென்னையில் வரவேற்பு

சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனைகள்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பயன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் நேற்று தமிழ்நாடு அணியும், ஹரியானா அணியும் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அணி 2வது முறையாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27 வது சீனியர் மகளிர் கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று சென்னை திரும்புகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான 22 வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மேலாளரான ரெஜினா தலைமையில் சிறப்பு வரவேற்பு அறிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேளதாளங்கள் கலை நிகழ்ச்சிகளும் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சீனியர் கால்பந்து சாம்பயன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் பத்து போட்டிகள் நடைபெற்றது. லீக் முதல் இறுதி போட்டி வரை அனைத்திலும் அதிக கோள்கள் பெற்று வெற்றி பெற்றோம். சில போட்டிகளில் மழையின் காரணத்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. சில மாநில அணிகளுடன் போட்டி கடினமாக இருந்த பொழுதும் தங்கள் அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாக வெற்றியினை பதிவு செய்திருக்கிறோம். இந்த போட்டியில் கலந்துகொள்ள அரசு எங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளது.
மேலும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu