முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி தள்ளிய தமிழக வீரர் சாய் சுதர்ஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் சாய் சுதர்ஷன்.
தான் களம் இறங்கிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலேயே தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதில் தமிழக வீரர்களின் பங்களிப்பு என்பது கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே இருந்து வருகிறது. நமக்கு தெரிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடங்கி தற்போதைய தினேஷ் கார்த்திக் வரை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தமிழக வீரர்கள் சாதனை படைத்து வந்திருக்கிறார்கள். இடையில் அவ்வப்போது தமிழக வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவர் இடம்பெறாத சூழலும் இருந்திருக்கிறது.
தற்போது தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் என பல கிரிக்கெட் வீரர்கள் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம் நடராஜனும் இந்திய அணியில் இடம் பெற்று ஒரு கலக்கு கலக்கினார். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வரவாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் களம் இறங்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய 1:1 என்ற அளவில் சமன் செய்து உள்ளது .
அடுத்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ் பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவை அவர்களது சொந்த மண்ணிலேயே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் 27 ஓவர்களிலேயே இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் இந்திய அணிக்கு இலக்கு 117 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் குறைந்த ரன்களிலேயே அவுட் ஆனாலும் அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த தமிழகத்தின் புதிய வரவான சாய் சுதர்ஷன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடியினர் நிதானமாக விளையாடி இந்திய அணியை எளிதாக வெற்றி பெறச் செய்தார்கள்.
இதில் ஸ்ரேயஸ் அய்யர் 52 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் தான் சந்தித்த 43 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இறுதிவரை அவுட் ஆகாமல் களம் நின்றார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் களமிறங்கிய முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. தான் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே உலக கிரிக்கெட் வீரர்களின் பார்வையை தன் பக்கம் இழுத்து உள்ள தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இன்றி கிரிக்கெட் உலகமே பாராட்டு தெரிவித்து வருகிறது.
இளம் புயலாக கிள்ம்பி உள்ள தமிழக வீரர் சாய் சுதர்ஷன் நிச்சயமாக எம்.எஸ். டோனி, விராட் கோலிக்கு நிகராக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu