டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி

டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
X
டி20 உலககோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றிப் பெற்றது.

டி20 உலக கோப்பை 2வது பிரிவு சூப்பர் 12 சுற்று லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.


தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (0) மற்றும் கேஎல் ராகுல் (3) ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். பின்னர் வந்த கேப்டன் கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி 1 சிக்ஸர் 1 பவுண்டரியை அடித்தது. சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எனினும், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்க விட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். எனவே இந்திய அணி, 12 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் குவித்தது.


தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் 30 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஷதாப் கான் வீசிய ஓவரில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கோலி அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி 49 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்து ஜடேஜா 13 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்தது. எனவே பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், வீராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வீழ்த்தினார் , ஹசன் அலி 2 விக்கெட்டையும், ஹரிஸ் ரவுப் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.



தொடர்ந்து 152 ரன்கள் கொண்ட இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் – முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியில் கேப்டன் பாபர் ஆஸம் 40 பந்துகளிலும், முகமது ரிஸ்வான் 42 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர்.

பந்துவீச இந்திய அணி திணறியது. யார் எப்படி போட்டாலும் சிக்ஸர்களாகவும், புண்டரிகளாகவும் அடித்து துவைத்தனர். இந்திய அணியால் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க மமுடியவில்லை.

இந்த இருவரும் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 17.5 ஓவரிலே எட்டிப்பிடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை முதல் முறை வீழ்த்தி வரலாற்று சாதனைப்படைத்துள்ளது. களத்தில் இறுதிவரை இருந்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் ஆஸம் 52 பந்துகளை சந்தித்து 68 ரன்களைஎடுத்தார். முகமது ரிஸ்வான் 55 பந்துகளை சந்தித்து 79 ரன்கள் குவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!