ஜெயிக்கப் போவது யாரு? இந்தியா- தெ. ஆப்பிரிக்கா நாளை 30 ந்தேதி மோதல்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கத்துக்குட்டி அணியான நமீபியா ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.
இதேபோல, வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி அயர்லாந்து அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசி பந்து வரை யாருக்கு வெற்றி? என்ற பரபரப்பு நிலவியது. இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி பி- பிரிவுக்கான புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 3 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. அந்த அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசம் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டு புள்ளிகளை பெற்றது.
சம பலம் கொண்ட இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதும் ஆட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என்பது மற்ற அணிகள் பெறும் வெற்றியே முடிவு செய்யும் நிலை உள்ளது.
பலம் வாய்ந்த இந்திய அணி
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி நல்ல பார்மில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனி ஒருவனாக களத்தில் நின்று அவர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலியின் பேட்டிங், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் இந்திய அணிக்கு பலமாக உள்ளது. கே.எல். ராகுல் இன்னும் சோபிக்காமல் உள்ளார்.
பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சமி, அர்ஸ்தீப் சிங் ஆகியோர் நல்ல முறையில் பந்து வீசி வருகின்றனர். ஸ்பின்னர்கள் இன்னும் ஜொலிக்காத நிலையே உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு அஸ்வின் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணிக்கு 61 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவின் பலம்- பலவீனம்
கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிடாவிட்டால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கும். அந்தப் போட்டியில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கியது தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு பாதகமான சூழலாகவே உள்ளது.
தொடர்ந்து, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ரூசோவ் மற்றும் 63 ரன்கள் குவித்த டி காக் ஆகியோரிடன் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 205 ரன்களை குவித்தது. மேலும், வங்கதேசம் அணியை 101 ரன்களுக்குள் சுருட்டியதில் தென் ஆப்ரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் நோர்ஜே (4 விக்கெட்), சம்சி (3 விக்கெட்) முக்கிய பங்காற்றினர்.
மார்க்ரெம், டேவிட் மில்லர், ரூசோவ், ஹேன்ட்ரிக்ஸ், பவுமா ஆகிய பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம். பந்து வீச்சில் நோர்ஜே, சம்சியை தவிர மற்றவர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாது பலவீனமாக உள்ளது. ரபாடா திடீரென விஸ்வரூபம் எடுத்தால் உண்டு.
இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் சம பலம் கொண்டதாக கருதப்பட்டாலும் நாளை30 ஆம் தேதி நடைபெறும் போட்டியிலும் தனது வெற்றியை இந்திய அணி பதிவு செய்யும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu