கடைசி பந்தில் டுவிஸ்ட்! சமத் சிக்ஸரில் வென்றது ஹைதராபாத்!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சரமாரியாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
18 பந்துகளைச் சந்தித்திருந்த ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி ஆட்டத்தை ஆடி ஹைதராபாத் அணிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தார். இந்த ஆட்டத்தில் 200+ ரன்கள் வந்தால் அதை சேஸிங் செய்வது கடினம் எனத் தெரிந்து பல்வேறு பவுலர்களை மாற்றி பார்த்தும் பலனில்லாமல் போய்விட்டது. 59 பந்துகளைச் சந்தித்திருந்த ஜோஸ் பட்லர் 95 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். புவனேஷ்வர்குமார் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
38 பந்துகளைச் சந்தித்து 66 ரன்களை எடுத்த சஞ்சு சாம்சனுடன் ஷிம்ரன் ஹெட்மயரும் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ராஜஸ்தான் அணி 214 ரன்களை குவித்தது.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியும் ஆரம்பம் முதலே அடித்து ஆடி ரன் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் 25 பந்துகளில் 33 ரன்களும், அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து அவுட் ஆன நிலையில், ராகுல் திரிபாதி களமிறங்கினார். ஹென்ரிச் கிளாசனும் அவருக்கு சப்போர்ட் செய்தார்.
29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் அவுட் ஆனார் திரிபாதி. அதன் பிறகு களமிறங்கிய பிலிப்ஸ் 7 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் அடித்தார். 19வது ஓவரில் அவரும் அவுட் ஆக, கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலைமையில் அப்துல் சமத் மற்றும் மார்க்கோ ஜான்சென் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
கடைசி பந்தில் சந்தீப் சர்மா அப்துல் சமத்துக்கு நோ பால் வீச அது கேட்ச் ஆக அமைந்தும் வீணாகப் போனது. இதனால் கடைசி பந்தை மீண்டும் வீச அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சமத். இதனால் ஹைதராபாத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது அந்த அணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu