மாநில கேரம் போட்டியில் பங்கேற்க அரசுப் பணியாளர்களுக்கு அழைப்பு…

மாநில கேரம் போட்டியில் பங்கேற்க அரசுப் பணியாளர்களுக்கு அழைப்பு…
X
சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான கேரம் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அரசுப் பணியாளர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் அரசுப் பணியாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியே மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்படுவது உண்டு.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள், குழு விளையாட்டுப் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி, தடகளப் பயிற்சி, இறகு பந்து பயிற்சி, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்தப்படும் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவது உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கான மாநில கேரம் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

அகில இந்திய சிவில் சர்வீஸ் கேரம் போட்டிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை திரிபுரா மாநிலம், அகர்தலாவில் உள்ள ஹபானியா மைதானத்தில் அமைந்துள்ள கண்காட்சி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் வைத்து நவம்பர் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாநில அளவிலான தேர்வு போட்டியில் அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வுப் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி– 628001 என்ற முகவரியில் அலுவலக நேரத்தில் வந்து தங்களது முழுவிபரத்தினை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணை (0461-2321149) தொடர்பு கொள்ளலாம்.

மாநில போட்டியில் தேர்வு பெறுவர்களுக்கு 11.11.2022 முதல் 13.11.2022 வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பின்னர் 16.11.2022 முதல் 20.11.2022 வரை திரிபுரா மாநிலம், அகர்தலாவில் உள்ள ஹபானியா மைதானத்தில் அமைந்துள்ள கண்காட்சி அரங்கில் வைத்து நடைபெறும் போட்டியில் மாநில அணிக்காக விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

மாநில கேரம் போட்டியில் அரசுத் துறையில் பணிபுரியும், தகுதியுள்ள அரசுப் பணியாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வதற்கு 10.11.2022 அன்று காலை 9 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்க அலுவலரிடம் ஆஜராகி போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!