2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி...
கடைசி வரை போராடி 65 ரன்கள் குவித்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்ஸார் படேல்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியா-இலங்கை அணிகள் இடையே மூன்று டி-20 போட்டிகள் நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 3 ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில், இந்திய அணி வீரர் தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டநாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், இந்தியா-இலகை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி புனே நகரில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவிந்தது. இலங்கை அணி தரப்பில் பதும் நிசங்கா 33 ரன்களும், சூசன் மெண்டிஸ் 52 ரன்களும், ஹசரங்கா 37 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவிந்தார். இந்திய அணி தரப்பில் உம்ரன் மாலிக் 3 விக்கெட்களையும், அக்ஸார் படேல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க வீரர்களான இசான் கிஷன் 2 ரன்களிலும், சுப்மன் கில் 5 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர் . தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரரான சூரியகுமார் யாதவ் சற்று நிலைத்து ஆடி மூன்று சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் அடித்தார்.
கேப்டன் ஹார்த்திக் பாண்டியா 12 எண்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இருப்பினும் கடைசிவரை போராடிய அக்ஸார் படேல் 6 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய மாவி இரண்டு சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும் இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் தசுன் சனகா, கசன் ரஜிதா, தில்சன் மதுசங்கா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். இலங்கை அணியிந் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் தசுன் சனகா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu