கோலி சதம் வீண்: பிளே ஆப் சுற்று கனவு தகர்ந்தது
![கோலி சதம் வீண்: பிளே ஆப் சுற்று கனவு தகர்ந்தது கோலி சதம் வீண்: பிளே ஆப் சுற்று கனவு தகர்ந்தது](https://www.nativenews.in/h-upload/2023/05/22/1718051-gill.webp)
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அணி குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு அணியின் சார்பில் கேப்டன் பாப் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவக்கம் தந்த இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 28 (19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 11 ரன்களும், லாம்ரோர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக விராட் கோலியுடன், ப்ரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். அணியின் ரன் ரேட்டை சீராக உயர்த்திய இந்த ஜோடியில் ப்ரேஸ்வெல் 26 (16) ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி 60 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.
இறுதியில் விராட் கோலி 101 (61) ரன்களும், அனுஜ் ராவத் 23 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத்தின் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சகா 12 (14) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய விஜய் சங்கர் 34 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 53 (35) ரன்களுக்கு அவுட் ஆனார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களமிறங்கிய தசுன் சனகா (0) ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் ஒரு சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 101 (61) ரன்களும், தேவாட்டியா 4 (5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியைப் போலவே, கில்லின் இரண்டாவது தொடர்ச்சியான சதம் இதுவாகும்.
முடிவில் குஜராத் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், வைஷாக் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து பிளே ஆப் சுற்று போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் இருந்த பெங்களூரு அணி வெளியேறியது.
இதன்படி குஜராத் , சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu