27 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
ஆஸ்திரேலியாவை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் அணி
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா டா சில்வா 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து காவெம் ஹாட்ஜ் 71 ரன்களும், கெவின் சின்க்ளேர் 50 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 8 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின், உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார் மிட்செல் மார்ஷ். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாட அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் குவித்தார். பாட் கம்மின்ஸ் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி அணிக்கு உதவினார். விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் நிதானமாக விளையாடிய கவாஜா 131 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கம்மின்ஸ் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ரன்கள் எடுத்தார்.
சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்டார்க் மற்றும் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 215 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 216 ரன்களை வெற்றி இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்தது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 156 ரன்களே தேவைப்பட்ட நிலையில், இன்று அந்த அணி களமிறங்கியது.
ஆனால், ஆஸி. வீரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மே.தீ.அணியின் ஷமர் ஜோசப் அபாரமாக பந்து வீசத் தொடங்கினார். நிதானமாக ஆடிய மேகரூன் ஜோசப் விக்கெட்டைக் கைப்பற்றி தன் கணக்கை துவங்கியவர், ட்ராவிஸ் ஹெட், மிட்ஷல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ் விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார்.
வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் ஹாசில்வுட்டும் பேட்டிங்கில் இருந்தனர். ஷமர் வீசிய பந்தில் ஹாசில்வுட் விக்கெட் ஆனார். முடிவில், 207 ரன்களுக்கு ஆஸி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் ஷமர் ஜோசப் 7 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மித் 91 ரன்கள் அடித்திருந்தார்.
மேலும், 27 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu