நியூசிலாந்து டி 20 போட்டிகளில் இருந்து சீனியர் வீரர்களுக்கு 'கல்தா'

சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டியில் இடமில்லை; ரோகித், விராத் கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களாக விராத் கோலி, ரோகித் சர்மா விளையாடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இனி டி20 போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என, பிசிசிஐ தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன், தற்போது நடந்து வரும் போட்டித் தொடர் முடிந்தவுடன் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணி மும்முரமாக, தற்போது நடந்து வருகிறது. தலைமை தேர்வுக்குழு அதிகாரி சேத்தன் சர்மா தலைமையிலான குழு, நியூசிலாந்து போட்டித் தொடரில் போட்டியிடும் இந்திய அணியை தேர்வு செய்து வருகிறது. டி20 அணியில் ரோகித் சர்மா, விராத் கோலி என, சீனியர் வீரர்களுக்கு இந்த முறை விளையாட வாய்ப்பு இல்லை என, திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கும் இனி டி20 யில் இடம் தரக் கூடாது எனவும், பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கு பிசிசிஐ தேர்வுக்குழு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராத் கோலி போன்ற சீனியர் வீரர்கள் 50-ஓவர் உலக கோப்பையில் முழு கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அத்துடன், அதற்கு அடுத்த ஆண்டு டி20 உலககோப்பை வரவிருக்கிறது. அதற்காக அணியை தயார் செய்ய வேண்டும். இளமையான வீரர்களை கொண்டு எதிர்காலதிற்கு அணியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் சீனியர் வீரர்கள் விலக்கப்பட்டிருகின்றனர். அவர்களது பணிச்சுமையும் எளிதாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த காரணங்கள் உண்மை போல தோன்றினாலும், சீனியர் வீரர்கள் முக்கிய போட்டிகளில் சரிவர விளையாடாமல், கோட்டை விடுவதே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, அரையிறுதி, இறுதி போட்டிகளில், வெற்றி வாய்ப்பை பலமுறை இழந்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் கடும் வேதனையை பலமுறை ஏற்படுத்தி இருக்கிறது இந்திய அணி. அதிலும் குறிப்பாக விராத் கோலி, ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின் போன்றவர்களின் மிக மோசமான ஆட்டம், அந்த போட்டி கைநழுவி செல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.
எனவே, சீனியர் வீரர்களை ஒதுக்கி விட்டு, புதியவர்களுக்கு குறிப்பாக சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக, கூறப்படுகிறது. ஏனெனில், துவக்கத்தில் கிரிக்கெட் சாதிக்கும் எண்ணத்தில் வரும் பலரும், நாளடைவில் பல சாதனைகள் செய்து பெயரும், புகழும் சம்பாதித்த பிறகு, விளையாட்டில் ஆர்வம் வெகுவாக குறைந்து விடுகிறது. அதனால், வெற்றியை போலவே, தோல்வியும் இயல்பானதே என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். அதன்பிறகு, வெற்றிக்கான அவர்களது முயற்சி தோற்றுவிடுகிறது என்பதே உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu