வங்கதேசம் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

வங்கதேசம் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…
X

இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அஸ்வின்- ஸ்ரேயாஸ் அய்யர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தது. இதற்கிடையே, இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்குள் சுருண்டது. மோமினில் ஹக் மட்டும் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 86.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 5 சிக்ஸ், 7 பவுண்ட்ரிகளுடன் 104 பந்தில் 93 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் அணி தரப்பில் கேப்டன் சாஹில் அல் ஹசன், தாஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

87 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி 231 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜாஹிர் ஹசன் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 98 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஆகியோர் அக்ஸார் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 2 ரன்களிலும், அடுத்து களம் இறங்கிய புஜாரா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், தொடக்க வீரர் சுப்மன் கில் 7 ரன்களிலும், வீரட் கோலி ஒரு ரன்னினிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. அக்ஸார் படேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களிடனும் பேட்டிங்கை தொடர்ந்தனர்.

உதன்கட் மேலும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸார் படேல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 74 ரன்களுக்குள் முக்கியமான 7 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது.

இருப்பினும், ஸ்ரேயாஸ் அய்யரும், அஸ்வினும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 47 ஆவது ஓவரில் இந்திய அணி வெற்றிக்குத் தேவையான 145 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒரு சிக்ஸ் மற்றும் 4 பவுண்ட்ரிகளை விளாசினார். ஸ்ரேயாஸ் அய்யர் 29 ரன்கள் எடுத்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தொடரை கைப்பற்றியது. வங்கதேசம் அணி தரப்பில் மெஹிந்தி ஹாசன் 5 விக்கெட்டுகளையும், சாஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு