கிரிக்கெட் உலகின் புதிய சூப்பர் ஸ்டார் ரிங்குவின் வறுமையிலும் வாழ்க்கையை மாற்றிய சின்ன தல!
சிலிண்டர் போடுபவரின் மகன், ஆட்டோ ஓட்டுபவரின் தம்பி, துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த ரிங்கு சிங் இப்படி ஒரே நாள் இரவில் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக மாறுவார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரே இரவில் இத்தனை பேர் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒரே இரவில் நடந்து முடிந்த கதையல்ல. அவர் இப்போது பிடித்திருக்கும் இடத்தை பிடிக்க எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறார். அவரின் கதை சொல்லும் பாடம் முடியும் என்று நம்பினால் நிச்சயம் முடியும் என்பதுதான்.
நீங்கள் ஒரு விசயத்தை செய்து முடிக்க எத்தனை முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உண்மையில் நாம் அந்த விசயத்தை செய்து முடிக்கும் வரை முயல வேண்டும். அது முதல் முயற்சியோ அல்லது முந்நூறு முயற்சிகளோ முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் முடியும் வரை முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை ரிங்கு சிங் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
எகிறி அடித்த ரிங்கு சிங்!
கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தால் எப்பேர்பட்ட பேட்ஸ்மன் களத்தில் இருந்தாலும் நாம் நிச்சயமாக நம்பிக்கை இழந்திருப்போம். கடைசி பால் வரை நின்று பார்க்க அங்கு களத்தில் நிற்பது தோனி இல்லையே எனும் மனநிலை இருந்தது. சரி என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று நினைக்கையில், ரிங்கு சிங்கின் பேட்டிலிருந்து பலத்த அடி வாங்கி பந்து ஒன்று எல்லைக் கோட்டுக்கு அருகே சென்று விழ, அங்கே பார்த்துக் கொண்டிருந்த கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன புன்னகை.
கடைசி ஓவரில் 6 பால் 5 சிக்ஸர் தேவை எனும்போது அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தவர் உமேஷ் யாதவ். சரியாக சிங்கிள் எடுத்து ரிங்கு சிங்குக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க அடுத்தடுத்த 5 பந்துகளில் நிகழ்ந்தது முற்றிலுமாக அதிசயம்தான்.
வறுமையால் வாடிய ரிங்குவின் குடும்பம்
உலகமே கொண்டாடும் ரிங்கு சிங் வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் 9 பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா சிலிண்டர் போடும் வேலை செய்பவர். அண்ணன் ஆட்டோ ஓட்டுநர். ரிங்கு சிங் குப்பை அள்ளும் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பயிற்சி செய்ய பயணம் செய்தவர். இவர்களின் குடும்ப வருமானம் மாதம் 10 ஆயிரம் வந்தாலே மிகப் பெரிய விசயம்.
இப்படி வறுமையிலும் விடாப்பிடியான பிடிவாதத்தால் தான் கொண்ட இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர் நம்ம ரிங்கு. அவருக்கு மிகவும் உறுதுணையாக ஆரம்ப காலங்களில் நம்பிக்கை அளித்து உதவி செய்தவர் நம்ம சின்ன தல ரெய்னா.
உத்திரப்பிரதேச அணியின் கேப்டனாக இருந்தவர் ரெய்னா. அவரின் தலைமையின் கீழ் முதன் முதலில் அந்த அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ரிங்கு சிங். அவர் அந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டதே மிகப் பெரிய கதை
தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தால் குடும்பத்தின் வறுமை இன்னும் அகப்பட்டுவிடும் எனும் நிலையில், படிப்பில் கவனம் செல்லாமல் வேலைக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார் ரிங்கு. பள்ளிப்படிப்பை 9வதிலேயே நிறுத்திவிட்டு உள்ளூர் தொடர்களில் விளையாடி வந்தார்.
உதவி செய்த சின்ன தல
பந்தயம் வைத்து கிரிக்கெட் விளையாடி அதில் பணம் சம்பாதித்தவர் அதன்மூலம் கை செலவுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அதனால் பெரிய பலன் இல்லை. ஆனாலும் தன்னுடைய திறமையைக் கிரிக்கெட்டில் அவர் கண்டெடுத்திருந்தார். தன்னால் மற்றவர்களை விட சிறப்பாக அடித்து ஆட முடிகிறது என்பதை கண்டறிந்த அவர், ஊரில் கிரிக்கெட் ஆடத் துவங்கியிருக்கிறார். இதனை அறிந்த சிலர் இதனை மாநில கிரிக்கெட் போர்டுக்கு தெரிவித்துள்ளனர். இவரின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் உத்திரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம்பெறச் செய்தனர்.
என்னதான் உத்தரப்பிரதேச அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் 11ல் விளையாட வாய்ப்பு கிடைக்கவேண்டுமே. பயிற்சி செய்வதற்கே கிளவுஸ், பேட் வாங்க காசு இல்லை. அணி நிர்வாகத்தின் உதவியுடன்தான் அங்கு பயிற்சி செய்துதான் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார் ரிங்கு.
இதனை அறிந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, ரிங்குவுக்கு பேட், கிளவுஸ் வாங்கி கொடுத்து சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். ஏனோ தானோ வென்று ஆடாமல் தொழில்ரீதியிலான ஆட்டத்தை நுணுக்கமாக ஆட சொல்லியிருக்கிறார். பின்னர் இவரது திறமையை அறிந்து அணியில் வாய்ப்பு வழங்கி, மிடில் ஆர்டரில் விளையாட செய்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச அணியில் இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் சரியாக விளையாடாமல் இருந்தாலும் அவரிடம் பேசி அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் ரெய்னா. இதுமட்டுமின்றி இவருக்கு பொருளாதார ரீதியில் பல உதவிகளையும் ரெய்னா செய்திருக்கிறார்.
முயற்சியைக் கைவிடாத ரிங்கு
31 பந்துகளில் 91 ரன்கள் அடித்து இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இன்னொரு போட்டியில் 41 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இப்படி அடிக்கடி அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்ததால் கொல்கத்தா அணியால் கவனிக்கப்பட்ட இவர், ஐபிஎல்லில் அடியெடுத்து வைத்தார். 2018ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
ஆனாலும் பெஞ்சில் அதிக நாட்கள் உக்கார வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இவர் எடுத்த 42 ரன்கள் இவருக்கான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்னொரு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய ரிங்கு, 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் வெற்றியைத் தவற விட்டார்.
ஒரு படத்தில் அஜித்குமார் சொன்னது போல இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. அதனால எப்பவும் முயற்சிய கைவிட்டு விடக்கூடாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu