ஐபிஎல்லின் அசர வைக்கும் "மின்னல்" சாஸ்திரிக்கே பிடிச்ச உம்ரான் மாலிக்
2022 ஐபிஎல் சீசனின் அதி வேகமாக வலம் வர ஆரம்பித்துள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ரான் மாலிக். இவர் எதிர்காலத்தில் இந்திய அணியில் இணைந்து கலக்குவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றவர்தான் உம்ரான் மாலிக். டி. நடராஜனுக்கு அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்குப் பதில் இவர் சேர்க்கப்பட்டார். ஆனால் விளையாடும் வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. மாறாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்ட பிறகே ஆறுதல் போட்டியில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக், அதிக அனுபவம் இல்லாதவர். இவரது வேகமான பந்து வீச்சு காரணமாகவே சன்ரைசர்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டு சீசனில் இவர் தக்க வைக்கப்பட்டபோது அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். பெரிய பெரிய வீரர்களைத்தான் வழக்கமாக தக்க வைப்பார்கள். ஆனால் பெரிதாக அனுபவமே இல்லாத உம்ரானை தக்க வைத்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.
ஆனால் தன் மீது கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அணி வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறார் உம்ரான் மாலிக். 22 வயதேயாகும் இவர் இந்தத் தொடரின் அதி வேக பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் 5 முறை மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக பந்து வீசி அசத்தியுள்ளார்.
உம்ரான் மாலிக்கின் வேகம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். அதை விட முக்கியமாக கிரிக்கெட் வல்லுநர்களின் பாராட்டுக்களையும் இவர் குவித்து வருகிறார். உம்ரான் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், அவர் நிலையாக பந்து வீசுகிறார். அவரது ஆட்டிடியூட் நன்றாக இருக்கிறது. இவர் வேகமாக கற்கும் திறமையுடன் இருக்கிறார். அவரது வேகம் சிறப்பாக இருக்கிறது. சரியான பகுதிகளில் பந்து போகிறது. இவர் எதிர்காலத்தில் பல பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்கப் போகிறார். அவரை சரியாக பயன்படுத்த வேண்டும். அவர் எதிர்கால இந்திய வீரர் என்று சாஸ்திரி பாராட்டித் தள்ளியுள்ளார்.
அந்த மாஜிக் அவரை இந்திய அணிக்கு இட்டுச் செல்லுமா என்பதை பார்க்கலாம், நடப்புத் தொடரில் உம்ரான் மாஜிக் செய்வாரா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu