சென்னையில் கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னைக்கு வந்து இருப்பது சொந்த ஊருக்கு வந்துள்ளது போன்ற உணர்வைத் தருவதாகக் கூறினார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காகப் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த கேலோ இந்தியா தொடக்க விழாவில், வணக்கம் சென்னை என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதன் பிறகு தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தனது முழு பேச்சையும் இந்தியில் பேசினார். நிகழ்ச்சியில் வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இளைய இந்தியாவே புதிய இந்தியா என்று முழக்கமிட்டார்.
கேலோ இந்தியா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "2024இல் விளையாட்டுத் துறைக்குச் சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா போட்டிகள் அமைந்துள்ளன.. சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போலவே இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாகத் தமிழ்நாடு திகழ்கிறது.. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன். தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. நாடெங்கும் இருந்து சென்னைக்கு வந்துள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்
மேலும், அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் பல சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்தியுள்ளோம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அனைத்து விளையாட்டுடன் கூடிய பிற துறைகளையும் மேம்படுத்தி வருகிறோம் என்றும் 2036இல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu