உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: கார்ல்செனை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: கார்ல்செனை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தா
X

 பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் 

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) பிரக்ஞானந்தா இன்று மோதுகிறார்.

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார். இரு ஆட்டங்கள் கொண்ட அரைஇறுதி சுற்றில் இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.

அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும். இதன்படி முதல் 2 ஆட்டம் டிரா ஆனது. 3-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் எதிராளியை அடக்கி அசத்தினார். எஞ்சிய ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் பிரக்ஞானந்தா 3.5 - 2,5 என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சென்னையைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு தகுதி பெற்ற 3வது இளம் வீரர் ஆவார். கேன்டிடேட் போட்டியில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் இன்று மோதுகிறார். இறுதிசுற்றும் இரு ஆட்டங்களை கொண்டது. இது சமன் ஆனால் டைபிரேக்கருக்கு நகரும்.

பின்னர் பிரக்ஞானந்தா கூறுகையில், 'இந்த தொடரில் கார்ல்செனுடன் மோதுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இறுதிப்போட்டியில் மட்டுமே அவரை சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருந்தது. இறுதிசுற்றில் நான் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. கார்ல்செனுக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். கேன்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன்' என்றார்.

அவருக்கு செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், பயிற்சியாளர் ரமேஷ், இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!