ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
ஆன்லைனில் ரம்மி விளையாடத் துவங்கும் பலரும் அட வெறும் 50 ரூபாய்ல என்ன வந்துடப் போகுது. வந்தா மல, போனா இதுன்னுதான் களமிறங்குறாங்க. ஆனா அந்த கேம் உள்ள உங்கள இழுத்து அடுத்தடுத்து பல வெற்றிகள குடுத்து உங்களையே அதோட அடிமையா மாத்திடும் என்று கூறுகிறார் ஆன்லைன் ரம்மி விளையாடும் நண்பர் ஒருவர். உண்மையில் ஆன்லைன் ரம்மி நியாயமாக விளையாடப்படும் ஒரு தளமா இல்லை மக்களை ஏமாற்றுகிறார்களா? மனிதர்களை ஏமாற்றுவது மெஷினா இல்லை மனிதர்களே தானா? நீங்களும் ஆன்லைனில் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா? எச்சரிக்கை... நீங்களும் ஏமாற்றப்படலாம்.
முதலில் ஒரு விசயத்தை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டுகளில் சகஜமான ஒன்றுதான். அதனால் ஒருமுறை தோற்றால் மறுமுறை வெல்லலாம் என்கிற கணக்குடன்தான் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் களமிறங்குகிறார்கள். உண்மையில் இது ஒரு சூது. எப்படி கோவில் திருவிழாக்களின்போது கட்டை உருட்டி விளையாடி மக்களை ஏமாற்றுகிறார்களோ அதைப்போல ஒரு சூதுதான் இது.
ஒரு 10,15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பெரும்பாலான கிராமங்களில் சாராயமும், சீட்டு விளையாட்டும் அதில் பணத்தை விட்டுவிட்டு வரும் குடும்ப தலைவர்களும் அல்லல்பட்டு நிற்கும் குடும்ப பெண்களும் இயல்பாக எல்லா இடங்களிலும் காணத்தகுந்த காட்சிகளாக கண்களில் நிற்பார்கள். அந்த அளவுக்கு சாராயத்தின் போதை போல சீட்டு விளையாட்டும் இருந்தது. லாட்டரி சீட்டாவது அதிர்ஷ்டத்தை நம்பி குலுக்கல் முறையில் ஒன்றைப் பெறுவோம் எனும் நம்பிக்கையில் வெறும் நம்பிக்கை மட்டுமே கொண்டு இருப்போம். ஆனால் சீட்டாட்டத்தில் ராஜாவாக நம்பிக்கையுடன் நமக்கு கொஞ்சம் விளையாட்டு திறனும் வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டு மோசடிகள்:
முதலில் நம்முடன் ஆன்லைனில் சீட்டு விளையாடுபவர்கள் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது என்பதைக் காண்போம். இவை ஏற்கனவே நடைபெற்ற விசயங்கள்தான் என்பதால் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்
ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டிலும் ஏமாற்றுவது என்பது சட்டத்துக்கு புறம்பானது. இருப்பினும், ஆன்லைன் ரம்மியில் நன்மைகளைப் பெற சில வீரர்கள் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்திய நிகழ்வுகள் உள்ளன. ஆன்லைன் ரம்மி மனிதர்களை ஏமாற்றும் சில வழிகள்:
BOTS: சில வீரர்கள் அவர்களுக்காக கேம் விளையாட BOTகளைப் பயன்படுத்துகின்றனர். போட்கள் என்பவை கம்யூட்டர்கள் மூலம் உருவாக்கப்படும் புரோகிராம்களாகும், அவை தானாக விளையாட்டை விளையாட வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஒவ்வொரு முறையும் சிறந்த நகர்வுகளை செய்ய முடியும். இது எதிரில் விளையாடும் மனிதர்களை விட இதை பயன்படுத்தும் வீரர்களுக்கு நியாயமற்ற ஆதாயத்தை அளிக்கிறது.
இருவரின் கூட்டு: ஆன்லைன் ரம்மியில் ஏமாற்றுவதற்காக வீரர்கள் ஒருவரையொருவர் கூட்டாகச் சேர்த்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் விளையாடும்போது, உங்களைத் தவிர மற்ற இருவரும் கூட்டாளிகளாக இருக்கலாம். ஒரு தனி சாட் பாக்ஸில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவர்களின் சீட்டுகளைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம், இது மற்ற வீரர்களை விட அவர்களுக்கு ஆதாயத்தை அளிக்கிறது.
ஹேக்கிங்: சில சந்தர்ப்பங்களில், கேம் சர்வரை அணுகுவதற்கும், கேமை தங்களுக்குச் சாதகமாக கையாளுவதற்கும் ஹேக்கிங் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். கேம் மென்பொருளை மாற்றியமைப்பது, கேமின் உள் தரவை அணுகுவது அல்லது நன்மையைப் பெற போலி கணக்குகளை உருவாக்குவது ஆகியவை இதில் அடங்கும்.
தீங்கிழைக்கும் மென்பொருள்: ஆன்லைன் ரம்மியில் நன்மைகளைப் பெற சில வீரர்கள் தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தலாம். மற்ற வீரர்களின் தகவலைத் திருடும் தீம்பொருள் அல்லது கடவுச்சொற்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை வெளிப்படுத்த விசை அழுத்தங்களைப் பிடிக்கும் கீலாக்கிங் மென்பொருளும் இதில் அடங்கும்.
ஆன்லைன் ரம்மி மீதான குற்றச்சாட்டுகள்
ஆன்லைன் ரம்மியில் எதிர்புறம் விளையாடுவது மனிதரே இல்லை அது பாட் எனப்படும் கணினி. கணினியுடன் மோதி மனிதர்களால் ஜெயிப்பது என்பது மிகவும் சவாலான விசயம்.
முதல் இரண்டு மூன்று சுற்றுகளில் வேண்டுமென்றே நம்மிடம் தோற்கும் எதிராளிகள், நம்மை அதிக பணம் கட்டி விளையாடத் தூண்டும் வகையில் பல விசயங்களை செய்கிறார்கள். முதல் 2 முறை உறுதியாக ஜெயித்துவிட்ட நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இதன்மூலம் அடுத்தடுத்து நாம் பணத்தை தைரியமாக எடுத்து வைக்கிறோம்.
அதேபோல முதல் மூன்று ஆட்டங்களில் வென்றுவிட்டு நான்காவது ஆட்டத்தில் கொஞ்சம் பெரிய தொகை கட்டி தோற்றுவிட்டால், அந்த தொகையை எடுக்க மீண்டும் நாம் விளையாடத் தூண்டப்படுவோம். ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அடுத்தடுத்து தோல்வியையே அடைவோம்.
வலையை வீசி பெரிதாக ஏமாற்றப்படும் மக்கள்
பொதுவாக ஆன்லைன் ரம்மி விளம்பரங்களிலேயே இந்த விளையாட்டை விளையாண்டாலே நாம் ஜெயித்து விடலாம் அதுவும் நூற்றுக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில் என நம்பவைக்கப்படுகிறார்கள். விளம்பரங்களே அப்படித்தான் வருகிறது. ரேண்டமாக ஒரு ஊர் பெயரைச் சொல்லி அந்த ஊரைச் சேர்ந்த இன்னார் இந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை கூறி, ஆன்லைனில் விளையாடத் தூண்டுகின்றனர்.
விளம்பரங்கள் மூலம் அதிக அளவு ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணம் சில மணி நேரங்களில் வீட்டில் இருந்தபடியே அதுவும் நமக்கு பிடித்த விளையாட்டின் மூலமே கிடைக்கிறது என அவர்களை மறைமுகமாக பிரைன்வாஸ் செய்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu