டி-20 கிரிக்கெட்: நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...

டி-20 கிரிக்கெட்: நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
X

முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னருக்கு இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவுடன் விளையாடியது. அதில், 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்த நிலையில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி வீரர்கள் பின் ஆலன், டேவன் கான்வே ஆகியோர் போட்டியை தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அணியின் எண்ணிக்கை 43 ரண்களாக இருந்தபோது பின் ஆலன் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பிலிப்ஸ்-கான்வே ஜோடி சிறப்பாக ஆடியது. இருப்பினும் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பிலிப்ஸ் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மிக்ட்சேல் களமிறங்கினார். இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில் கான்வே 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்ஷித் சிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.


அதன் பிறகு பிராக்வெல் ஒரு ரன்னிலும், மைக்கேல் சாண்ட்னர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிட்சேல் கடைசி வரை ஆட்டமிடாமல் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷத் சிங், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ஆனால் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுப்மன் கில் 7 ரன்களிலும், இஸான் கிஷன் 4 ரன்களிலும், ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 15 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது.


அதன்பிறகு சூர்யகுமார் யாதவும், ஹார்த்திக் பாண்டியாவும் ஓரளவு நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இருப்பினும் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராக்வெல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 34 பங்குகளில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது சோதி பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு களம் இறங்கிய தீபக் ஹூடா 10 ரன்களிலும், ஷிவம் மாவி 2 ரன்களிலும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிராக்வெல், மைக்கேல் சாண்ட்னர், பெர்குசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் களையும், சோதி, டபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தனர். நியூஸிலாந்து அணியின் மிட்சேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 29 ஆம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil