எளிதாக வென்ற லக்னோ அணி! கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பூரான்!

எளிதாக வென்ற லக்னோ அணி! கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பூரான்!
X
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ அடல்பிகாரி வாஜ்பாய் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என முன்பே தெரிந்ததுதான். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

ஆட்டம் துவங்கியதும் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களான அன்மோல் ப்ரீத் சிங் மற்றும் மயாங் அகர்வால் ஆகியோர் களமிறங்கினார்கள். கே எல் ராகுல் தலைமையிலான அணி ஃபீல்டிங்கிற்கு களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்திலேயே தொடங்கினர். அன்மோல் ப்ரீத் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடினாலும் மயாங்க் அகர்வால் 7 பந்துகளைச் சந்தித்து 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவர் குருணால் பாண்டியா வீசிய பந்தை அடிக்க முயற்சிக்க மார்கஸ் ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அன்மோல் ப்ரீத் சிங்கிற்கு பார்ட்னராக களமிறங்கினார் திரிபாதி. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் கொஞ்சம் வலுவான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இவர்களை பிரிக்க லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டனர்.

அன்மோலுடன் ராகுல் திரிபாதி சேர்ந்து 8வது ஓவர் வரை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 50ஐ எட்டியதும் அவுட் ஆனார் அன்மோல் ப்ரீத் சிங். அன்மோல் ப்ரீத்சிங் அவுட் ஆகும்போது களத்தில் ராகுல் திரிபாதி இருந்தார். அவருடன் பார்ட்னராக சேர்ந்தார் எய்டன் மார்க்ரம். வந்த வேகத்திலேயே முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேற, 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத் அணி.

நிலையாக நின்று ஆடிய ராகுல் திரிபாதியுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரோக், வந்த வேகத்திலேயே வெளியேறினார். அதன் பிறகு ராகுல் திரிபாதியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் சற்று நிதானமாக ஆடலாம் என்று முடிவு செய்த வீரர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

18வது ஓவரின் 2வது பந்தில் 34 ரன்கள் எடுத்திருந்த ராகுலும், 19வது ஓவரில் ரஷீத்தும் அவுட் ஆகினர். 20வது ஓவரில் உம்ரான் மாலிக்கும் அவுட் ஆகி வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.

ஹைதராபாத் அணி வீரர்கள் அப்துல் சமத் 21 ரன்களுடனும், புவனேஷ்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் துவக்க வீரர்களாக, கேல் மேயர்ஸ் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேயர்ஸ் இந்த ஆட்டத்தில் அடிக்க முடியாமல் திணறினார். 5வது ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து தீபக் ஹூடா, ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆன அவருக்கு பிறகு குருனால் பாண்ட்யா களமிறங்கினார். குருணால் பாண்ட்யா, கே எல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். 13 வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய பந்தை அடித்து அன்மோல்ப்ரீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பாண்ட்யா அவுட் ஆன நிலையில் கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் மார்கஸ் ஸ்டொய்னிஸ். இருவரும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கே எல் ராகுல், அடில் ரஷீத் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

ஸ்டொய்னிஸுடன் அடுத்து ஷெப்பார்டு களமிறங்கினார். அவரும் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அடில் ரஷீத் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்ததாக ஸ்டொய்னிஸுடன் ஜோடி சேர்ந்தார் நிகோலஸ் பூரான். வந்த வேகத்திலேயே பவுண்டரி அடித்தார்.

16வது ஓவர் தமிழக வீரர் த நடராஜன் வீசினார். அவரது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்னை எட்டியது லக்னோ அணி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!