ஐபிஎல் 25வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்அணி வெற்றி.சறுக்கிய கொல்கத்தாஅணி

ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது. கொல்கத்தா அணியில் அறிமுக வீரராக ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சு, கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடியை தந்தது. தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் பந்தை நன்றாக ஸ்விங் செய்தாலும், 5 வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் சிக்சருக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் 9 ரன்கள் சென்றது. 2 வது ஓவரை வீசிய யான்சென், 3 வது பந்திலேயே பிஞ்சின் விக்கெட்டை காலி செய்தார். இதனையடுத்து 5 வது ஓவரை தமிழக வீரர் நடராஜன் வீசினார். முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரின் ஸ்டம்புகளை சிதறவிட்டார் நடராஜன். இதனையடுத்து களத்துக்கு வந்த சுனில் நரைன் 2வது பந்தில் சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார்.
ஒரு கட்டத்தில் உம்ரான் மாலிக் 148 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச, அதனை சற்றும் எதிர்கொள்ள முடியாமல் ஸ்டம்புகள் சிதற ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். இதே போன்று உம்ரான் மாலின் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டு ஜாக்சனும் பெவிலியன் திரும்பினார். இதனால் கேகேஆர் அணி 103 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் நிதிஷ் ரானா மற்றும் ரஸில் ஜோடி அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியை மீட்டனர். கேகேஆர் அணி கடைசி 5 ஓவரில் 55 ரன்கள் எடுக்க, நிதிஷ் ராணா அரைசதமும், ரஸில் 25 பந்தில் 49 ரன்களும் அடித்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு கேகேஆர் 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்களிலும், வில்லியம்சன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களத்துக்கு வந்த ராகுல் திரிபாதி ருத்ரதாண்டவம் ஆடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என பறக்கவிட 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அவருக்கு தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரமும் நல்ல ஆதரவு அளித்தார். பின்னர் அவரும் அதிரடியை காட்டினார். 37 பந்துகளில் 71 ரன்கள் விளாசி திரிபாதி ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் மார்க்ரம் 36 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதனால் 13 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை ஐதராபாத் அணி எட்டியது. இதன் மூலம் 3 ஆண்டுக்கு பிறகு கொல்கத்தா அணியை ஐதராபாத் வெற்றி கண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu