ஐபிஎல் 2023: விடாது தொடரும் மும்பை சோகம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 5-வது லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இஷான் கிஷன் (10), கேமரூன் கிரீன் (5 ரன்) இருவரும் பெங்களூரு வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 1 ரன்னில் (10 பந்து) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திடம் சிக்கினார். அதற்கு முன்பாக ரோகித் சர்மாவுக்கு கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக்கும், பந்து வீசிய முகமது சிராஜிம் மோதிக்கொண்டதால் நழுவிப் போனது. ஆனால் கிடைத்த அதிர்ஷ்டத்தை ரோகித் பயன்படுத்த தவறினார். சூர்யகுமார் யாதவும் (15 ரன்) ஜொலிக்கவில்லை. அப்போது மும்பை அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (8.5 ஓவர்) இழந்து தள்ளாடியது
இளம் வீரர் திலக் வர்மா அணியை சரிவில் இருந்து மீட்டார். அடிக்க வசதியான பந்துகளை நொறுக்கிய அவர் ரன்ரேட்டை படிப்படியாக உயர்த்தினார். அவருக்கு நேஹல் வதேரா (21 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார்.
கடைசி கட்டத்தில் திலக் வர்மாவின் அதிரடி பேட்டிங்கால் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. முதல் 3 ஓவர்களில் 5 ரன் மட்டுமே வழங்கி கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், 19-வது ஓவரில் 5 வைடு வீசியதுடன் 2 பவுண்டரியும் விட்டுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஹர்ஷல் பட்டேலின் கடைசி ஓவரில் 2 சிக்சர்கள் பறந்தன.
20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மா 84 ரன்களுடனும் (46 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), அர்ஷத் கான் 15 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 60 ரன்கள் சேர்த்தனர். பெங்களூரு தரப்பில் கரண் ஷர்மா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, ஆகாஷ் தீப், ஹர்ஷல் பட்டேல், பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத்துவங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும், விராட் கோலியும் மும்பையின் பந்து வீச்சை சிதறடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அரைசதம் கடந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். பிளிஸ்சிஸ் 73 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தினேஷ் கார்த்திக் டக்-அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து கோலி பவுண்டரி, சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 45-வது அரைசதத்தை பூர்த்தி செய்த விராட்கோலி 82 ரன்களுடனும் (49 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), மேக்ஸ்வெல் 12 ரன்களுடனும் (2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல்-ல் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து சீசனிலும் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. அந்த மோசமான வரலாற்றை இந்த முறையும் அவர்களால் மாற்ற முடியவில்லை. தொடர்ந்து 11-வது ஆண்டாக அவர்களை 'முதல் ஆட்டத்தின் தோல்வி' சோகம் துரத்திக் கொண்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu