இந்தியாவின் அரையிறுதி நம்பிக்கை.. வங்கதேசமும் மழையும் வழி விடுமா?

இந்தியாவின் அரையிறுதி நம்பிக்கை.. வங்கதேசமும் மழையும் வழி விடுமா?
X
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. குரூப் 1ல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் அணிகளும், குரூப் 2ல் இந்தியா பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணிகளும் விளையாடி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் குரூப் 2 தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்து, இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. இந்தியாவும், வங்கதேச அணியும் 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என்ற நிலையில் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளன.

இந்தியா இதுவரை ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டாலும் , கேப்டன் ரோகித் சர்மாவுடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என 22 ரன்களே எடுத்து மோசமான ஃபார்மில் உள்ளார். இதனால் கே.எல்.ராகுல் தனது மோசமான பார்மிற்காக நிறைய விமர்சனங்களைப் பெற்றார். . கே.எல். ராகுல் பேக்-ஃபுட் வீரர் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இருந்தாலும், நடைபெற்று முடிந்த போட்டிகளில் மோசமாக விளையாடியதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடாமல் பாகிஸ்தானுக்கு எதிராக இக்கட்டான நிலையில் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதனிடையே விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்டிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையிலான டி20 உலகக் கோப்பை குரூப் 2 போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றால் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தப்போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரு அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முனைப்பில் உள்ளன.

எதிர்ப்பார்ப்புகள்:

தென்னாப்பிரிக்கா இதுவரை 5 புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்திலும், இந்தியா மற்றும் வங்காளதேசம் முறையே 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வே மூன்று புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் இதுவரை இரண்டு புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. நெதர்லாந்து இன்னும் ஒரு புள்ளியை பதிவு செய்யாமல், புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ளது.

மழை காரணமாக உண்மையில் போட்டி கைவிடப்பட்டால், இந்தியா மற்றும் வங்காளதேசம் இரண்டும் விளையாட வேண்டிய ஒரு போட்டியுடன் 5 புள்ளிகளுடன் சிக்கித் தவிக்கும். இது பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மோதலை மேலும் சுவாரஸ்யமாக்கும். ஏனெனில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் வரை கிடைக்கும்.

இந்தியா (5 புள்ளிகள்) வங்கதேசத்துடன் ரன்-ரேட் மோதலைத் தவிர்க்க ஜிம்பாப்வேயை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். தென்னாப்பிரிக்கா (5 புள்ளிகள்) குழுவில் முதலிடத்திற்கு நெதர்லாந்தை வீழ்த்த வேண்டும். ஒரு வேளை இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா நழுவினால், பாகிஸ்தான் (4 புள்ளிகள்) மற்றும் வங்கதேசம் (5 புள்ளிகள்) அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

இதனால் குழுவின் முடிவை தீர்மானிப்பதில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, மேகமூட்டம் மற்றும் 60 சதவீத மிதமான மழைக்கான வாய்ப்புள்ளதாகவும், மாலையில் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்போட்டியில் இந்திய அணிக்கு வங்கதேச அணியும், மழையும் வழி விடுமா என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
புற்றுநோய் வராம இருக்க டெய்லி இத பண்ணுங்க..! என்னென்ன பண்ணனும்னு தெரியுமா?..