ஐசிசி டி20-யில் இந்தியாவின் பரிசுத்தொகை? அடுத்து நியூசிலாந்து சுற்றுப்பயணம்
ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. குரூப் 1ல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் அணிகளும், குரூப் 2ல் இந்தியா பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி (நாளை) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பை டி20 தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இது இந்திய ரூபாயில் ரூ. 13.03 கோடி ஆகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) இரண்டாம் இடம் பெறும் அணிக்கு அதில் பாதித் தொகை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. எனவே இரண்டாம் இடம் பெறும் அணிக்கு $0.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.5 கோடி வழங்கப்படுகிறது.
அதேபோல், அரையிறுதியில் தோற்கும் அணிகளும் தலா $0.4 மில்லியன், அதாவது ரூ. 3.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே, பாகிஸ்தான் - நியூசிலாந்து மற்றும் இந்தியா- இங்கிலாந்து போட்டிகளில் தோற்கும் அணி ரூ. 0.4 மில்லியன் டாலர்கள், அதாவது 3.25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. அதன்படி இந்திய அணிக்கு 3.25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம்:
உலகக்கோப்பை டி20 போட்டியிலிருந்து வெளியேறிய இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இந்த மாதம் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருடன், தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் ஆகியோரும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிற்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் 18ம் தேதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி நவம்பர் 20ம் தேதி மவுண்ட் மோங்கனுயிலும், மூன்றாவது போட்டி நவம்பர் 22ம் தேதி நேப்பியரிலும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், கே. யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நவம்பர் 25ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நவம்பர் 27ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும்.
இதில் ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அஹ்மத் சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu